ஏமன் போர் தொடர்பில் அமெரிக்காவுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை

யேமனில் நடக்கும் போரில் அமெரிக்கா நுழைந்தால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஹவுதி அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வரும் அந்தக் குழுவைக் கையாள்வதற்கு, சவுதி அரேபியா ட்ரம்ப் நிர்வாகத்தின் உதவியைக் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்தே, ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எரிசக்தி சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி மத்திய கிழக்கை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ள பரந்த பிராந்திய மோதல் தொடங்கி சில மாதங்கள் கடந்த நிலையில்,

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளுக்கு எதிராக ஏமன் அரசாங்கத்திற்கு சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி ஆதரவளிக்கும் உள்நாட்டுப் போர் ஜூலை மாதத்தில் மீண்டும் தீவிரமடைந்தது.

உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவை உலுக்கும் வகையில், ரியாத் விமான நிலையம் மீதான தொடர் தாக்குதல்கள் உட்பட, அந்நாட்டின் எண்ணெய் நிலையங்கள், கப்பல்கள் மற்றும் போக்குவரத்து மையங்களை ஹவுதிகள் குறிவைக்கத் தொடங்கினர்.

திங்கள்கிழமை இரவு தலைநகர் மீது மீண்டும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஹவுதி ஏவுகணை ஒன்றை இடைமறித்ததாக சவுதி கூட்டணி கூறிய நிலையில், அந்த அமைப்பும் மீண்டும் விமான நிலையத்தைத் தாக்கியதாகத் தெரிவித்தது.

பின்னர், சவுதியின் தெற்கில், யேமன் எல்லையருகே இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாகக் கூட்டணி அறிவித்தது. சவுதி இராணுவத் தளம் ஒன்று இதற்கு முன்பு தாக்குதலுக்குள்ளான நகரமான கமிஸ் முஷைத்தை (Khamis Mushait) நோக்கி, ஹவுதிகள் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகக் கூட்டணிப் படை 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை ரியாத் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் முந்தைய உதவி கோரிக்கைகளை நிராகரித்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

ஹவுதிகள் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார்கள். அவர்கள் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார்கள். இது நல்லதல்ல, என்று ட்ரம்ப் திங்களன்று கூறினார்.

இந்த நிலையில், யேமனுக்கு எதிரான மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால், பதிலடி கொடுப்பது குறித்த முடிவை நாங்கள் ஆலோசிக்க மாட்டோம்; மாறாக, அமெரிக்காவையும் பிராந்தியத்தில் உள்ள அதன் அனைத்து நலன்களையும் குறிவைத்து அதிரடி மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஹவுதிகளின் அரசியல் குழு உறுப்பினர் முகமது அல்-புகைதி தெரிவித்தார்.

மேலும், சவுதி எண்ணெய் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் தாக்குதலுக்கான முறையான இலக்குகளாக மாறியுள்ளதால், அங்குள்ள அனைத்து ஊழியர்களும் தொழிலாளர்களும் அந்த இடங்களிலிருந்து விலகி இருக்குமாறு அவர் எச்சரித்தார்.

சனிக்கிழமை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சவுதி மண்ணில் நடந்த மிக மோசமான தாக்குதலாகாவே பார்க்கப்படுகிறது.

மேலும், இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய ட்ரம்ப், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேசவிருப்பதாகத் தெரிவித்தார்; மேலும், சவுதி மேற்கொள்ளும் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணைவது குறித்து பரிசீலிக்கவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

பாதுகாப்பான நிலையில் இருந்துகொண்டு யேமனுக்கு எதிராக இனிமேலும் போர் நடத்த முடியாது என்ற செய்தியை பட்டத்து இளவரசருக்கு தெரிவிப்பதே, சவுதி இலக்குகள் மீதான இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று புகைதி கூறியுள்ளார்.

இதனிடையே, சமீபத்திய நிகழ்வுகள் நமது உள்கட்டமைப்பு, நமது நிறுவனங்கள், நமது மக்கள் மற்றும் நமது மீள்திறனைச் சோதித்துள்ளன என்று சவுதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் திங்களன்று ரியாத்தில் நடந்த ஒரு மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும், சமீபத்திய வாரங்களில் நிகழ்ந்தவை தீவிரமானவை; நமது எதிர்வினையும் அதே அளவு தீவிரமானதாக இருக்கும் என்றார்.

Bootstrap