உக்ரைனுடன் அமெரிக்கா தொடர்ந்து உளவுத் தகவல்களைப் பகிர்ந்து வருவதாகவும், ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போர்நிறுத்தத்தை ரஷ்யா மீறியுள்ளதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை பெறுவதற்கும், ரஷ்ய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் உக்ரைன் அமெரிக்க உளவுத் தகவல்களைப் பெரிதும் நம்பியிருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் படைகள் நேற்று நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அனல் மின் நிலையம் ஒன்றையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
மேலும், வழக்கமாக வழங்கப்படும் முன்கூட்டிய எச்சரிக்கைகள் கிடைக்கவில்லை என்றும், ரஷ்யா மேலும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குத் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்த எரிசக்தி தொடர்பான போர்நிறுத்தத்தை ரஷ்யா மீறியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
எனினும், இந்தப் போர்நிறுத்தத்தை ரஷ்யாவும் உக்ரைனும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனுக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
எரிபொருள் விலையைக் குறைக்கும் நோக்கில் ரஷ்ய டீசல் ஏற்றுமதி மீதான தடைகளையும் அமெரிக்கா தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.