கடத்தல் எச்சரிக்கை - ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்ட எயார் இந்தியா விமானம்!

ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து இந்தியாவின் டில்லி நோக்கிப் பயணித்த எயார் இந்தியா விமானம், விமானக் கடத்தல் தொடர்பான எச்சரிக்கைக் குறியீடு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (14) ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் மும்பை வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, விமானி சர்வதேச விமானக் கடத்தல் எச்சரிக்கைக் குறியீடான ‘ஸ்குவாக் 7500’ (Squawk 7500) குறியீட்டை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, விமானம் ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர், காவல்துறை, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் விமானத்தில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் தேசிய பாதுகாப்புப் படையினரும் (NSG) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

‘ஸ்குவாக் 7500’ என்பது விமானக் கடத்தல் அல்லது விமானத்தைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றும் முயற்சி இடம்பெறுவதை விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ரகசியமாகத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சர்வதேச அவசரக் குறியீடாகும்.

எனினும், குறித்த விமானத்தில் இந்த எச்சரிக்கைக் குறியீடு அனுப்பப்பட்டதற்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

Bootstrap