ஒன்ராறியோவில் நேர மாற்றம் நிறுத்தம் - புதிய நடைமுறை குறித்து வெளியான அறிவிப்பு

ஒன்ராறியோ மாகாணத்தின் வடமேற்குப் பகுதிகளில் ஆண்டுக்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறையை நிறுத்துவதற்கு மாகாண அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒக்டோபர் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, Kenora உள்ளிட்ட Manitoba மாகாணத்தை ஒட்டியுள்ள வடமேற்கு ஒன்ராறியோ பகுதிகளில் 2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் நிரந்தர Daylight Saving Time நடைமுறையை அமுல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இனிமேல் வசந்தகாலத்தில் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னோக்கி மாற்றவோ, இலையுதிர்காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றவோ தேவையிருக்காது.

அண்டைய மாகாணமான Manitoba-வுடன் நேரத்தை ஒரே மாதிரியாகப் பேணுவதன் மூலம் வர்த்தகம், போக்குவரத்து, மருத்துவச் சேவைகள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை எளிதாக்க முடியும் என ஒன்ராறியோ அரசு தெரிவித்துள்ளது.

Kenora நகரில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் 5,261 பேர் பங்கேற்றதுடன், அவர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் நிரந்தர நேர நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த மாற்றம் டொராண்டோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் கிழக்கு நேர மண்டலப் பகுதிகளுக்குப் பொருந்தாது.

எனவே, டொராண்டோவில் நவம்பர் 1ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு கடிகார நேரம் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டு அதிகாலை 1 மணியாகும்.

வடமேற்கு ஒன்ராறியோவின் சில பகுதிகளில் நேர மாற்றம் நிறுத்தப்படவுள்ள நிலையில், டொராண்டோவில் வழக்கமான நேர மாற்றம் தொடரவுள்ளது.

Bootstrap