துருக்கியில் தொடரும் கனமழை - இருவர் உயிரிழப்பு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 14 வயது சிறுவன் ஒருவன் நீர் தேங்கிய பகுதியில் மின்சாரம் தாக்கியும், 34 வயதுடைய ஒருவர் வழுக்கி விழுந்து தலையில் காயமடைந்தும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,நேற்று(14) பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வீதிகள், வீடுகள், வணிக நிலையங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ளநீரில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பணியிடங்களில் சிக்கிய நூற்றுக்கணக்கானவர்களை மீட்புப் படையினர் மீட்டனர்.

கனமழையால் இஸ்தான்புல் நகரின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.

சில இடங்களில் 1985ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக அதிகமான மழையளவுகளில் ஒன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (15) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்துக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Bootstrap