பாகிஸ்தானில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெஷாவர் நகரில் உள்ள தனியார் பாடசாலையின் மேற்கூரை இன்று (15) காலை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

Reuters செய்தியின் சமீபத்திய தகவலின்படி, குறைந்தது 32 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களில் பெரும்பாலானோர் 13 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காலை சுமார் 8.48 மணியளவில் இடம்பெற்றதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் பல மணி நேரம் ஈடுபட்டனர்.

மேலும், குறைந்தது 45 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூன்று சிறுவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் Reuters தெரிவித்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கட்டடத்தின் கட்டமைப்பு பலவீனமாக இருந்ததுடன், மேல்தளக் கூரையில் ஏற்பட்ட அதிகப்படியான சுமை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கலாம் என பெஷாவர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகப் பாடசாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்களை மீட்பதற்காகப் பெற்றோர்களும் பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டதால் அப்பகுதியில் பெரும் சோகமான சூழல் நிலவியது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Bootstrap