ருமேனியாவின் கடற்கரைக்கு அப்பால் கருங்கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ‘வைன் டிரேடர்’ எனும் எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கர தீ விபத்து மற்றும் வெடிப்புகளைத் தொடர்ந்து, கப்பலில் பணியாற்றிய 12 பேரில் 08 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடற்படை மற்றும் அவசரகால அதிகாரிகள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ளவர்களைக் கண்டறியும் பணியில் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்களும், இரண்டு மீட்பு படகுகளும் களமிறக்கப்பட்டுள்ளன.
எனினும், அப்பகுதியில் நிலவும் மிகக் கடுமையான உயரமான அலைகள் காரணமாக மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சுலினா அருகே டானூப் நதியின் முகத்துவாரத்திலிருந்து கிழக்கு திசையில் 13 கடல் மைல் (24 கிலோ மீற்றர்) தூரத்தில் சான் மாலினோ கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில் இன்று காலையில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அண்மைக்காலமாக கருங்கடலின் மேற்குப் பகுதியில் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகி வரும் நிலையில், அருகிலுள்ள கப்பல்களின் தகவல்படி இந்தக் கப்பல் இரண்டு ட்ரோன்களால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதேவேளை அருகில் உள்ள பாம்பு தீவு பகுதியில் ரஷ்ய ட்ரோன்களும் கண்டறியப்பட்டுள்ளன.