அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலம் பெண்ட் நகரில் அமைந்துள்ள சில்வர் ரெயில் ஆரம்பப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் மற்றும் வயது வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தை 16 வயதுடைய சிறுவன் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பெண்ட் காவல்துறை திணைக்களப் பேச்சாளர் ஷீலா மிட்செல், பிற்பகல் 1 மணியளவில் காவல்துறை சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சிறுவன் பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவன் பாடசாலைக்கு வெளியே இருந்த ஒருவரால் சுடப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பாடசாலை வளாகம் உடனடியாக முடக்கப்பட்டதுடன்,மாணவர்களை அவர்களின் பெற்றோருடன் மீண்டும் இணைப்பதற்கான விசேட மையமொன்றையும் காவல்துறையினர் அமைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகமான எப்.பி.ஐ.யும் இணைந்துள்ளது.

விசாரணைக்குத் தேவையான அனைத்து வளங்களையும் வழங்கத் தயாராக இருப்பதாக எப்.பி.ஐ. பணிப்பாளர் காஷ் பட்டேல் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு பாடசாலை வளாகங்களில் இடம்பெற்ற 36ஆவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவெனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bootstrap