ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்களின்படி, உலகின் அதிகளவு அணுஆயுதங்களைக் கொண்ட நாடாக ரஷ்யா விளங்குவதுடன், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவும் சீனாவும் காணப்படுகின்றன.

இருப்பினும், பயன்பாட்டில் உள்ள (Deployed) ஏவுகணைகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவே ரஷ்யாவை விட முன்னணியில் உள்ளது.

நியூஸ்மெக்ஸ் (Newsmax) ஊடகத்துக்கு அளித்த நேர்காணலின் போது, சீனா இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் அணுஆயுதப் பலத்தில் அமெரிக்காவுக்கு நிகராகச் "சமநிலையை எட்டும்" என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

"சாத்தியமானால் அணுஆயுதங்களை முழுமையாக அகற்றவே நான் விரும்புகிறேன். எனவே, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் இது குறித்துப் பேச்சுவார்த்த நடத்தி வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் (Xi Jinping) இது குறித்து விவாதித்துள்ளதாகவும் நியூஸ்மெக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட 'நியூ ஸ்டார்ட்' (New START) அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தின் காலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து,  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரால் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை மேலும் தொடர்வதற்கு, அரசாங்கத்தின் விசேட நிர்வாகத் தீர்மானம் அவசியமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா அணுஆயுதங்களைப் பயன்படுத்தாது என்றும், அந்த நாட்டிற்கு அமெரிக்கத் தரைப்படை வீரர்களை அனுப்புவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Bootstrap