சினிமா காட்சிகளா அல்லது நிஜமா? பறக்கும் திறனுடன் களமிறங்கும் டெஸ்லாவின் புதிய ‘ரோட்ஸ்டர்’ சிற்றூந்து!

பறக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் புதிய சிற்றூந்து ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிவியல் புனைகதைத் திரைப்படங்களில் மட்டுமே இதுவரை காணப்பட்ட இத்தகைய தொழில்நுட்பம், டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சோதனை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எலான் மஸ்க், இரண்டு பேர் பயணிக்கக்கூடிய புதிய ‘ரோட்ஸ்டர்’ (Roadster) விளையாட்டு ரக சிற்றூந்தானது, மணிக்கு 60 மைல் வேகத்தை ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் திறன் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிற்றூந்தின் அடிப்பகுதியில் உள்ள உறிஞ்சும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சரிவுப் பாதையில் ஏறுதல், தலைகீழாகத் தொங்கிய நிலையில் இருத்தல் மற்றும் காற்றில் நகர்ந்து, காற்றுத் தாரைகளின் உதவியுடன் தரையிறங்குதல் போன்ற செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சிற்றூந்தின் உற்பத்தியை 2028ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த வாகனம் உண்மையிலேயே பறக்கும் சிற்றூந்தாக செயற்படுமா, நீண்ட தூரப் பயணங்களுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பது தொடர்பில் நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

Bootstrap