பள்ளிப் போராட்டங்களின்போது பொலிசாரால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களால் பல பதின்மவயதினர் போரில் ஏற்பட்டதைப் போன்ற காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என பிரெஞ்சு சட்டத்தரணிகளும் மனித உரிமை அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
குறித்தப் போராட்டங்களில், முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பதின்மவயதினர் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்; அவர்களில் சிலர், தாங்கள் அடிக்கப்பட்டதாகவோ அல்லது இன ரீதியாக அவமதிக்கப்பட்டதாகவோ தெரிவித்துள்ளனர்.
பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரான்சில் மிகப்பெரிய இளைஞர் போராட்டம் நான்காவது வாரத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது, பணிக்கு வராத ஆசிரியர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்கவும், சிதிலமடைந்த கட்டிடங்களைச் சீரமைக்கவும் கோரி மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளிகளை முடக்கியுள்ளனர்.
ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் நான்கு இளம் வயதினர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது உட்பட, போராட்டக்காரர்களுக்கு எதிரான பொலிசாரின் வன்முறைச் செயல்கள் தொடர்பான 36 குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறை உள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
மேலும் ஆறு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்; இது தவிர, உடல் ரீதியான தாக்குதல்கள், அவமதிப்புகள் அல்லது பாலியல் வன்கொடுமை துன்புறுத்தல்கள் தொடர்பான பிற புகார்களும் பதிவாகியுள்ளதாக உள்விவகார அமைச்சர் லாரன்ட் நுனெஸ் செனட் சபையிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு பிரான்சின் லென்ஸ் நகரில், அக்டோபர் 5 அன்று நடந்த ஒரு பள்ளிப் போராட்டத்தில் காவல்துறையினர் வீசிய ஸ்டன் கையெறி குண்டு வெடித்ததில், ஒரு தொழிற்கல்வி உயர்நிலைப் பள்ளியில் தச்சு வேலை படித்து வந்த 15 வயது இவானின் கை துண்டிக்கப்பட்டது.
அந்த காயங்கள் போர்க்காலத்திலானது போன்றே காணப்பட்டதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார். பாடசாலைக்கு சென்ற போது, போராட்டம் நடப்பதை அறிந்ததாகவும், ஆனால் இவான் எந்த வன்முறையிலும் ஈடுபட்டவரல்ல என்றும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
தரையில் கிடந்த கையெறி குண்டு ஒன்றால் இவான் தனது இடதுக் கையை இழந்துள்ளார். அவரது வலது கையின் விரல்கள் பல துண்டிக்கப்பட்டன, மேலும் அவரது உடலின் பிற பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டன.
இதனால் அவர் மருத்துவமனையில் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார், மேலும் அவரது குடும்பத்தினர் குற்றவியல் புகார் அளித்துள்ளனர். 14 வயது சிறுவன் ஒருவருக்கு கிரனேட் லாஞ்சரிலிருந்து வந்த குண்டு தாக்கியதில், அவரது தாடையில் இரண்டு முறிவுகள், கீழ்த்தாடைப் பற்களை இழந்து, மேல்தாடைப் பற்கள் அனைத்தும் உடைந்தது உட்பட, முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
சிறுவனின் பெற்றோர், அவன் பள்ளிக்குச் சென்றிருந்ததாகவும், ஆனால் பள்ளி அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு வீடு திரும்ப விரும்பியதாகவும் தெரிவித்தனர்.
பிரான்சில் காவல்துறை ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பல ஆண்டுகளாகவே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, 2018-2019 காலகட்டத்தில் நடைபெற்ற 'மஞ்சள் சீருடை' (gilets jaunes) போராட்டங்களின் போது, பங்கேற்பாளர்கள் பலர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தீவிரமடைந்தது;
இதில் சிலர் தங்கள் பார்வையை இழந்ததாகவும், கை, கால்கள் சிதைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போதைய போராட்டங்களின் விளைவாக, முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான மாணவர்கள் கைது செய்யப்பட்டு காவல் துறையின் பிடியில் வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது தாங்கள் அடிக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் அல்லது வாய்மொழித் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் பதின்ம வயதினர் தன்னிடம் கூறியதாகச் சில சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் மாத மத்தியில் பள்ளிப் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து, 18 வயதுக்குட்பட்ட மொத்தம் 6,773 பேர் கைது செய்யப்பட்டு, காவல்துறை காவலில் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை; 2,190 பேர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர்; மேலும், சுமார் 2,000 பேருக்கு, நீதிமன்ற விசாரணையோ அல்லது தண்டனையோ இன்றி, குடியுரிமைப் பயிற்சி போன்ற மாற்று நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.