நம்மை பிரித்தாள சூழ்ச்சி நடக்கிறது: கனடா பிரதமர் எச்சரிக்கை

ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் வாக்கெடுப்புகள் நடத்த உள்ள நிலையில், அமெரிக்கா அதை பயன்படுத்திக்கொண்டு கனடாவைப் பிரிக்க முயல்வதாக மறைமுகமாக எச்சரித்துள்ளார் கனடா பிரதமர்.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிவது தொடர்பிலான வாக்கெடுப்புக்குத் தயாராகிவருகிறது.

இந்நிலையில், அதை பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா கனடாவைப் பிரிக்க முயல்வதாக மறைமுகமாக எச்சரித்துள்ளார், கனடா பிரதமரான மார்க் கார்னி.

ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றிய கனடா பிரதமரான மார்க் கார்னி, அமெரிக்கா, கனடாவை பிரித்து, அதன் மூலம் நம்மை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சி செய்கிறது என்று கூறியுள்ளார்.

உலகம் அபாயகரமானதாக மாறிக்கொண்டு வருவதுடன் பிரிந்தும் கிடக்கிறது என்று கூறிய கார்னி, நமது எல்லைக்கு வெளியே உள்ள சிலர் கனடாவை உடைத்து அதன் மூலம் நம்மை தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள அவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

என்றாலும், அவர் நேரடியாக அமெரிக்காவையோ அதன் ஜனாதிபதியான ட்ரம்பின் பெயரையோ குறிப்பிடவில்லை.

கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.

ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.

ஆகவே, ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்களில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். ஆகவே, அதற்காக வாக்கெடுப்பு ஒன்றை நடத்த அம்மாகாணம் முடிவு செய்துள்ளது.

Bootstrap