ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் தென்பகுதியில் உள்ள ஓசெர்னோவ்ஸ்கி கிராமத்திற்கு அருகே, வெள்ளிக்கிழமை அதிகாலையில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தி ஜப்பான் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஜப்பானின் ஹகோடேட் நகரில் இதன் தாக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் 9.9 ரிக்டர் அளவு எனத் தவறாகக் குறிப்பிட்டு ஓர் முன்கூட்டிய எச்சரிக்கையை வெளியிட்டது.
சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது, ஆனால் அது உண்மையாக இருந்திருந்தால், 1960-ல் சிலியைத் தாக்கிய நிலநடுக்கத்தையும் விஞ்சி, இது மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்திருக்கும்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, கருவிகள் மூலம் அளவிடப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சில நிலநடுக்கங்கள் பின்வருமாறு:
பயோபியோ, சிலி: பொதுவாக வால்டிவியா நிலநடுக்கம் என்று குறிப்பிடப்படும், வரலாற்றிலேயே மிகப்பெரிய இந்த நிலநடுக்கம் 1,655 பேரைக் கொன்றதுடன், இரண்டு மில்லியன் மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றியது.
1964 ஆம் ஆண்டின் மாபெரும் அலாஸ்கா நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 9.2 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் நீடித்ததுடன், 130 பேர் மரணமடையக் காரணமானது.
2004 சுமத்ரா நிலநடுக்கம்: இது இந்தியப் பெருங்கடலில் 9.1 ரிக்டர் அளவிலான சுனாமியைத் தூண்டி, 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பலி வாங்கியது.
தோஹோகு நிலநடுக்கம், 2011: இதுவும் ரிக்டர் அளவில் 9.1 ஆகப் பதிவான ஒரு நிலநடுக்கமாகும். இது ஃபுகுஷிகா அணுசக்திப் பேரழிவை ஏற்படுத்தியதுடன், 1,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ஒரு மாபெரும் சுனாமியையும் தூண்டியது.
கம்சட்கா நிலநடுக்கம், 1952: இது உலகில் முதன்முதலாகப் பதிவுசெய்யப்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாகும். இது ஹவாயை நோக்கி 30 அடி உயர சுனாமியை அனுப்பியது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ஒரு நிலநடுக்கத்தின் அளவு, அது நிகழும் பிளவுப் பகுதியின் பரப்பளவைப் பொறுத்தது - பிளவுப் பகுதி எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, நிலநடுக்கமும் அவ்வளவு பெரியதாக இருக்கும்.
இதுபோன்ற ஒரு மாபெரும் நிலநடுக்கம் குறித்து அதிகாரப்பூர்வ தரவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், 9.9 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம், இன்றைய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை விட சுமார் 32,000 மடங்கு அதிக ஆற்றலையும், 1960 சிலி மற்றும் 2011 தோஹோகு நிலநடுக்கங்களை விட கணிசமாக அதிக ஆற்றலையும் வெளியிடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதற்கு, சுமார் 3,000 முதல் 5,000 கிலோமீற்றர் நீளத்திற்கு ஒரு மாபெரும் புவித்தட்டுப் பிளவு ஏற்படுவதுடன், நிலம் குறைந்தது ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக அதிர்ந்துகொண்டே இருக்கும் என்கிறார்கள்.
மேலும், மையப்பகுதிக்கு அருகில் முழுமையான அழிவு ஏற்படும்; கடல் தளத்திலும் பெரும் இடப்பெயர்ச்சி ஏற்படக்கூடும். கண்டங்களின் கடற்கரைப் பகுதிகளில் பெரும் பகுதிகள் பல மீட்டர் அளவிற்கு நிரந்தரமாகத் தாழவோ அல்லது உயரவோ கூடும்;
இது அப்பகுதியின் நில அமைப்பை மாற்றி, ஓத நிலங்களை (tidal lands) நீருக்கடியில் மூழ்கச் செய்துவிடும். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்வு, பூமியின் சுழற்சி வேகத்தில் சிறிய மாற்றத்தை (மைக்ரோ விநாடி அளவிலான மாற்றங்கள்) ஏற்படுத்தவும், அதன் அச்சில் சாய்வை உருவாக்கவும் கூடும் என்று சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.