இந்தோனேசியாவில் நிலவும் வறட்சியால் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், மவுண்ட் புரோமோ தேசிய பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகத் தேசிய பூங்காவில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீயைக் கட்டுப்படுத்தப் போராடிய 12 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழு, பலத்த காற்றினால் திடீரெனப் பரவிய தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகைக்கு மத்தியில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் நால்வர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், காட்டுத்தீயால் உருவான புகை அண்டை நாடான மலேசியாவிற்கும் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக அங்குள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள் அவசரமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் காற்று மாசு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.