சென்னையில் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்த 6 விமானங்கள் !

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக, கொல்கத்தா, டெல்லி, கொழும்பிலிருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்தன. இதனால் பயணிகள் இலேசாக அச்சமடைந்தனர்.

கொல்கத்தாவிலிருந்து 162 பயணிகளுடன் வந்த இண்டிகோ எயார்லைன்ஸ் விமானம் திருச்சிக்கும், 194 பயணிகளுடன் வந்த எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோவைக்கும் அவசரமாக திருப்பிவிடப்பட்டன.

டெல்லி, கொழும்பு, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இதர 8 விமானங்கள் தரையிறங்க அனுமதியின்றி வானிலை வட்டமடித்தபடி காத்திருந்தன. பின்னர் வானிலை சீரானதையடுத்து அவை ஒவ்வொன்றாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன. இந்த மோசமான வானிலையால் சென்னை விமான நிலையத்தில் ஒட்டுமொத்தமாக 10 வருகை விமானங்கள் மற்றும் 12 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 22 விமானங்களின் சேவைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியிருக்கிறது. நேற்று சென்னைக்கு மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையின் தாக்கம் இன்று காலையும் நீடித்ததால், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களால், சரியான நேரத்திற்கு தரையிறங்க முடியவில்லை.

Bootstrap