உக்ரைன்-ரஷ்யா போரில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய இராணுவத்தின் 36-வது மோட்டார் ரைஃபிள் பிரிகேடில் சிக்னல் அதிகாரியாக பணியாற்றிய லெவ் ஸ்டுப்னிகோவ் (Lev Stupnikov) என்ற லெப்டினன்ட், தனது சொந்த இராணுவத்தின் ரகசியங்களை உக்ரைனுக்கு கசியவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் படையினரின் இருப்பிடங்கள், இராணுவ திட்டங்கள், ரேடியோ அலைவரிசைகள், கண்காணிப்பு கமெரா தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளார்.
இதன் மூலம் உக்ரைன் படைகள் பல தாக்குதல்களை நடத்தி, 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர்.
2024 பிப்ரவரி மாதம், கிழக்கு உக்ரைனில் நடந்த பயிற்சி முகாமின் இடம், வீரர்களின் எண்ணிக்கை, துல்லியமான இடம் ஆகியவற்றை ஸ்டுப்னிகோவ் புகைப்படம் எடுத்து உக்ரைனுக்கு அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தி, 68 வீரர்கள் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர். இதில் கர்னல் குசெயின் முஸாயேவ் உள்ளிட்ட 10 அதிகாரிகள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பின் பல்வேறு தாக்குதல்களில் அவர் வழங்கிய தகவல்கள் முக்கிய பங்காற்றின. ஹோட்டல் அடித்தளத்தில் தங்கியிருந்த ரஷ்ய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பிரிகேட் கட்டளை மையத்தில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தையும் உக்ரைன் தாக்கியது.
ஸ்டுப்னிகோவ் தனது சொந்த படையினரின் உபகரணங்களையும் சிதைத்தார். ட்ரோன் பேட்டரி பாகத்தை சேதப்படுத்தி, கமெரா கண்காணிப்புகளை முடக்கியார். இதனால் ரஷ்ய படைகளின் நடவடிக்கைகள் பலமுறை தோல்வியடைந்தன.
இறுதியில், 2024 ஜூலை மாதம், அவர் உக்ரைன் படைகளின் உதவியுடன் மைகில்ஸ்கே கிராமம் அருகே எல்லையைத் தாண்டி தப்பிச் சென்றார். பின்னர், உக்ரைன் படைகளில் இணைந்து, ரஷ்யாவுக்கு எதிராக போராடி வருகிறார்.
இந்த சம்பவம் ரஷ்ய இராணுவத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உளவு நடவடிக்கைகள் போரின் நிலையை எவ்வாறு மாற்றுகின்றன என்பதற்கான மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இது பார்க்கப்படுகிறது.