தானியங்கி கார் நிறுவனமான வேமோ, ரொறன்ரோவில் ரோபோடாக்சிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், வேமோ(waymo) என்ற தானியங்கி கார் பிரிவை நிர்வகித்து வருகிறது.
அமெரிக்காவில் ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கி வரும் இந்த வேமோ 3,000 ரோபோடாக்சிகளை சேவையில் வைத்து, வாரத்திற்கு சுமார் 5,00,000 கட்டணப் பயணங்களை வழங்குகிறது.
மேலும் லண்டன் மற்றும் டோக்கியோவிலும் அவற்றைச் சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில், கனடாவின் ரொறன்ரோவில் தனது ரோபோடாக்சிகளை இயக்க உள்ளதாக வேமோ அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக, உள்ளூர் சாலை வலையமைப்புகளின் உயர்-தெளிவுத்திறன் வரைபடங்களை உருவாக்குவதே நோக்கமாக கொண்டு மனிதர்களை வைத்து இந்த வாகனங்களை இயக்க உள்ளது.
அதன் பின்னர், ரோபோடாக்சிகளை மனிதப் பாதுகாப்புப் பணியாளருடன் பொதுச் சாலைகளில் சோதனை செய்யும். பின்னர் மனிதர்கள் ஓட்டுநர் இருக்கையிலிருந்து அகற்றப்பட்டு, தனது ரோபோடாக்சிகளில் பயணம் செய்யப் பொதுமக்களை அழைக்கும்.
2028 ஆம் ஆண்டில்,ரொறன்ரோவில் ரோபோடாக்சிகளை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
ரொறன்ரோவைச் சேர்ந்த எலிமென்ட் ஃப்ளீட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் வாகனக் குழுமப் பராமரிப்பு, சரிபார்ப்பு ஓட்டுநர் பணி, வாடிக்கையாளர் சேவை மற்றும் செயல்பாடுகள் போன்ற துறைகளில் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஆதரிக்க எதிர்பார்ப்பதாகவும் வேமோ தெரிவித்துள்ளது.