சீனாவில் மணமகன் மற்றும் மணமகள் இருவருக்குமே 'ஜூ சியாசோங்' என்ற ஒரே பெயர் கொண்ட தம்பதியரின் திருமணம் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், மணமகனுக்கு 33 வயதும் மணமகளுக்கு 28 வயதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களது வயதில் மட்டுமே வித்தியாசம் உள்ளதே தவிர, சீன மொழியில் இவர்களது பெயரை எழுதும் எழுத்துக்கள் கூட துளி அளவும் மாறாமல் அப்படியே ஒரே மாதிரியாக இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருமண வரவேற்பு அழைப்பிதழ்கள் மற்றும் பதாதைகளில் மணமகன், மணமகள் ஆகிய இரண்டு இடங்களிலுமே 'ஜூ சியாசோங்' என்று ஒரே பெயர் அச்சிடப்பட்டிருந்ததால், ஏற்பாட்டாளர்கள் தவறுதலாக ஒரே பெயரை இரண்டு முறை அச்சிட்டுவிட்டதாக ஆரம்பத்தில் குழப்பமடைந்துள்ளனர்.
பெயரில் மட்டுமல்லாது, இவர்கள் இருவருமே சிவில் வானூர்தி போக்குவரத்து துறையில்தான் ஒன்றாகப் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே துறையில் பணியாற்றுவதும் ஒரே பெயரைக் கொண்டிருப்பதும் இவர்களது காதலை மேலும் சுவாரசியமாக்கியுள்ள நிலையில், இணையவாசிகள் இந்தத் தற்செயலான நிகழ்வை "தூய்மையான விதி" என்று குறிப்பிட்டுத் தம்பதியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.