கனடா இராணுவ முகாமில் பயங்கர தீ விபத்து: உயிரிழப்புகளும் காயங்களும்!

கனடாவின் மிகவும் பரபரப்பான இராணுவ முகாம்களில் ஒன்றான அல்பர்ட்டா மாகாணத்தின் வைன்ரைட் (Wainwright) பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் சனிக்கிழமை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியுள்ளன.

குறித்த முகாமில் இடம்பெற்ற ஒரு பாரதூரமான சம்பவத்தைத் தொடர்ந்து தீ பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த காற்று காரணமாகத் தீ வேகமாகப் பரவியதாக அந்தப் பகுதியின் நகராட்சி நிர்வாகம் சனிக்கிழமை மாலை தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாலை 4 மணியளவில் உதவி கோரி அழைப்பு கிடைத்ததாக வைன்ரைட் ரோயல் கனேடியன் மவுண்டட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவத்தின் விளைவாக உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி காணொளி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அல்லது தீ பரவுவதற்கான ஆரம்பக் காரணம் குறித்து அவர் எந்தவொரு விபரத்தையும் வெளியிடவில்லை.

இந்தச் சம்பவம் தற்போது மிகவும் நுட்பமான சூழ்நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Bootstrap