செவ்வாய் கிரகத்தின் துணை கோளான போபோஸ் (Phobos) மீது விண்கலத்தை தரையிறக்கி, அங்கிருந்து மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்கலப் பயணம் ஆரம்பமாகியுள்ளது.
ஜப்பான் விண்வெளி ஆய்வு மையமான (JAXA) ஜாக்சா தலைமையிலான மார்ஸ் மூன்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் (MMX) விண்கலம், ஜப்பானில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து அந்நாட்டு நேரப்படி நாளை (20) காலை 04:41 க்கு விண்ணில் பாய்கிறது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், செவ்வாய் கிரகம் அல்லது அதன் துணைக் கோள்களிலிருந்து மாதிரிப் பொருட்கள் பூமிக்குக் கொண்டுவரப்படுவது முதல் சந்தர்ப்பமாக இது வரலாற்றி பதிவாகும்.
2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போபோஸை சென்றடைய திட்டமிட்டுள்ள இந்த விண்கலம், மற்றுமொரு துணைக் கோளான டெமோஸையும் ஆய்வு செய்துகொண்டு போபோஸில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாயின் ஈர்ப்பு விசைக்கும் போபோஸின் குறைந்த ஈர்ப்பு விசைக்கும் இடையே உள்ள சவால்களைக் கடந்து, வெறும் 10 கிராம் அளவுக்கு கோளின் மாதிரி துகள்கள் சேகரிக்கப்படவுள்ளன.
இந்த மாதிரிகள் ஒரு சிறிய கெப்சூலில் அடைக்கப்பட்டு 2031ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் வூமேரா பாலைவனத்தில் வந்து சேரும்.
செவ்வாயின் துணைக் கோள்கள் ஆரம்பத்தில் விண்கல் மோதலால் உருவானதா அல்லது செவ்வாயின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட வெளி சூரியக் குடும்பத்தின் சிறுகோள்களா என்ற நீண்டகாலக் கேள்விக்கு இந்த ஆய்வு விடை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும், செவ்வாயில் ஏற்படும் தாக்கங்களால் போபோஸில் பதிந்திருக்கக்கூடிய செவ்வாயின் துகள்களும் ஆய்வுக்குக் கிடைக்கும் என்பதால், இது விண்வெளி வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.