மிரட்டல்: பல்கேரியாவுக்கு திருப்பிவிடப்பட்ட வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறக்கம்!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்குப் பயணித்த ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் வானூர்தி, மிரட்டல் காரணமாக பல்கேரியாவின் தலைநகர் சோபியாவுக்கு திருப்பிவிடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, OS82 என்ற இலக்கத்துடன் பயணித்த ஏர்பஸ் A320 ரக வானூர்தியில் 51 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 57 பேர் இருந்துள்ளனர்.

ருமேனிய எல்லைக்கு அருகில் வானூர்தி பறந்துகொண்டிருந்தபோது மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானி வானூர்தியை சோபியா வானூர்தி நிலையத்துக்குத் திருப்பிவிடத் தீர்மானித்துள்ளார்.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பல்கேரிய வான்படைக்குச் சொந்தமான போர் வானூர்தி ஒன்று, சோபியா வானூர்தி நிலையத்தைச் சென்றடையும் வரை குறித்த வானூர்திக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், வானூர்தியில் விசேட பாதுகாப்புப் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Bootstrap