கொலம்பியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் விபத்து - 14 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில் பாதுகாப்பு வசதிகளின்றி இயங்கி வந்த சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

நரினோ மாகாணத்தின் சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து, அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாகாண ஆளுநர் லூயிஸ் அல்போன்சோ எஸ்கோபார் தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவின் பல கிராமப்புறப் பகுதிகளில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் முன்னெடுக்கப்படுவதால், இத்தகைய விபத்துகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், முறைசாரா சுரங்கத் தொழில்களைச் சட்டக் கட்டமைப்புக்குள் கொண்டுவந்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தேசிய சுரங்க முகமை மற்றும் கனிம வளங்கள், எரிசக்தி அமைச்சு ஆகியவற்றிடம் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த ஓகஸ்ட் மாதம் நரினோ மாகாணத்தின் பாலிகார்பா பகுதியில் இடம்பெற்ற மற்றொரு சட்டவிரோத சுரங்க விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap