சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் பாதுகாப்பு, அந்நாட்டின் புனிதத் தலங்கள், குறிப்பாக இரு புனித மசூதிகளையும் பாதுகாப்பதற்கு பாகிஸ்தான் தேவையான உதவிகளை வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் கடந்த ஓகஸ்ட் மாதம் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஒரு நாடு தாக்கப்பட்டால் ஏனைய நாடுகள் இராணுவம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உதவ வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசீம் முனீர் செவ்வாய்க்கிழமை ஈரானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கானது என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மற்றும் சவூதி அரேபியா மீதான ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தொடர்பான பதற்றங்களுக்கு மத்தியில் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளமை கவனத்தைப் பெற்றுள்ளது.