ஆல்பர்ட்டா வாக்கெடுப்பு: புலம்பெயர்தல் தொடர்பில் மக்கள் முடிவு என்ன?

ஆல்பர்ட்டா வாக்கெடுப்பின் முடிவுகள், புலம்பெயர்தல் தொடர்பில் என்ன முடிவெடுப்பது என்பது குறித்த வழிகாட்டுதலை அளித்துள்ளதாக மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு, நேற்று முன் தினம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, நடைபெற்றது.

ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் இணைந்தே இருக்கவேண்டுமா, அல்லது, தனியாக பிரிவது தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்னும் கேள்விக்கு, 75.18 சதவிகிதம் மக்கள், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் இணைந்தே இருக்கவேண்டும் என்றே பதிலளித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், வாக்கெடுப்பின் முடிவுகள் இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை. வாக்கெடுப்பில், மக்களிடம் ஒரு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்வித்தாளில் 10 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

10ஆவது கேள்விதான், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் இணைந்தே இருக்கவேண்டுமா, அல்லது, தனியாக பிரிவது தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்னும் கேள்வி.

ஆக, மீதம் ஒன்பது கேள்விகள் உள்ளன. அவை குறித்த முடிவுகள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன.

ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், வாக்கெடுப்பு தொடர்பிலான கேள்வித்தாளில், ஐந்து கேள்விகள் புலம்பெயர்தல் தொடர்பிலானவை.

அதாவது, புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டுமா, அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டுவரவேண்டுமா,

புலம்பெயர்ந்தோருக்கு அரசு உதவி கிடைக்க அவர்கள் 12 மாதங்களாவது காத்திருக்கவேண்டுமா, புலம்பெயர்ந்தோர் மருத்துவம், கல்வி போன்ற விடயங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு கட்டணம் விதிக்கலாமா, தேர்தலில் அவர்கள் வாக்களிக்க கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என ஐந்து கேள்விகள் ஆல்பர்ட்டா மாகாண மக்களிடம் கேட்கப்பட்டுள்ளன.

இந்த கேள்விகளுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவரவில்லை என்றாலும், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், ஆல்பர்ட்டா மாகாண மக்களில் பாதிக்கும் மேலானவர்கள், புலம்பெயர்தல் குறித்து கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்றே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித்தும், ஆல்பர்ட்டா மக்கள், புலம்பெயர்தல் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கவே விரும்புகிறார்கள் என்றே கூறியுள்ளார்.

ஆனால், Banff-Kananaskis தொகுதி எம் எல் ஆவான சாரா (Sarah Elmeligi) என்பவர், தங்கள் பகுதியில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதை புலம்பெயர்ந்தோர்தான் நிரப்புவதாகவும் தெரிவிக்கிறார்.

தங்கள் பகுதி மக்கள், மாகாணத்தின் பொருளாதாரத்துக்கும் சமூகத்துக்கும் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு முக்கியம் என்றே கருதுவதாக தெரிவிக்கிறார் அவர்.

இந்நிலையில், வாக்கெடுப்பில் இடம்பெற்றுள்ள புலம்பெயர்தல் தொடர்பான கேள்விகளுக்கு ஆல்பர்ட்டா மக்கள் அளிக்கும் பதில்கள் தங்கள் பகுதி மீது பாதிப்பை ஏற்படுத்தும் என தான் நம்புவதாக சாரா தெரிவித்துள்ளார்.

Bootstrap