சவூதி அரேபியாவில் கிங் ஃபஹத் சர்வதேச வானூர்தி நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் பலி, எட்டு பேர் காயம்!

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்மாம் நகரிலுள்ள கிங் ஃபஹத் சர்வதேச வானூர்தி நிலையம் மீது நேற்று (21) மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் சிவில் வானூர்திப் போக்குவரத்துப் பொது ஆணைக்குழு (General Authority of Civil Aviation) தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர் சவூதி அரேபியாவில் வசித்து வந்த ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த எட்டு பேரும் சிறிய காயங்கள் முதல் கடுமையான காயங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலினால் வானூர்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள பொருட் சேதங்கள் குறித்து அதிகாரிகள் தற்போது மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது அல்லது அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது தொடர்பில் அதிகாரிகள் இதுவரை மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

இதேவேளை, சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் நான்கு ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படை அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் அண்மைக்காலமாக வானூர்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்களால் அந்நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கவலைகள் அதிகரித்துள்ளன.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் எந்தத் தரப்பினர் உள்ளனர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளும் சேத மதிப்பீடுகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Bootstrap