யாழ்ப்பாணம், சங்கானை மற்றும் மல்லாகம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அடையாளப்படுத்தப்படும் குறித்த நபர், Mercantile Investment PLC மற்றும் Cargills Bank ஆகிய நிதி நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியவர் எனக் கூறப்படுகிறது.
வங்கித் துறையில் அவர் பெற்றிருந்த அனுபவத்தையும், அவர் மீதான நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு பலர் வைப்புத் தொகைகள் மற்றும் கடன்கள் என்ற அடிப்படையில் அவரிடம் பணம் வழங்கியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட பணத்தின் மொத்தத் தொகை 15 கோடி ரூபாயைத் தாண்டும் என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த நபரின் குடும்பத்தினரும் நிதித் துறையுடன் தொடர்புடைய பணிகளில் இருந்தவர்கள் எனக் கூறப்படுவதால், அவரை நம்பிப் பணம் வழங்கியதாகப் பாதிக்கப்பட்ட சிலர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள Cargills Bank கிளையில் பணியாற்றிய காலத்தில், உயிரிழந்த வாடிக்கையாளர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்த சம்பவம் தொடர்பில் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவல் தொடர்பிலும் சுயாதீனமான அல்லது அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் அவசியமாகிறது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, செப்டம்பர் 21ஆம் திகதி குறித்த நபர் காணாமல் போயுள்ளதாகக் கூறி அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதற்கு மறுநாளான செப்டம்பர் 22ஆம் திகதி, அவர் பணியாற்றியதாகக் கூறப்படும் Mercantile Investment PLC நிறுவனத்துக்குச் சென்ற அவரது தந்தை, அங்கிருந்து அவர் கடவுச்சீட்டைப் பெற்றுச் சென்றதாக நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
கடவுச்சீட்டு எடுத்துச் செல்லப்பட்ட அதே நாளில், குறித்த நபர் இந்தியா வழியாக சிங்கப்பூருக்குச் சென்றிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களிடமிருந்தும் அவர் பெருந்தொகைப் பணத்தைக் கடனாகப் பெற்று வருவதாகக் கூறப்படும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
இவை தொடர்பான மேலதிக ஆதாரங்கள் வெளியாகவில்லை. பணத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொதுமக்கள், தமது முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, பணம் எவ்வாறு பெறப்பட்டது, அது எங்கு சென்றது, குறித்த நபர் தற்போது எங்குள்ளார் என்பன தொடர்பில் உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தமக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி இழப்புகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருவதுடன், சட்டரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.