விண்வெளி என்பது நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கான களமாக மாறக்கூடாது என்றும், அது உலக நாடுகளின் ஒத்துழைப்புக்கான இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்களைச் சந்திப்பதற்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஐ.நா. பொதுச்சபையில் நடைபெற்ற 'விண்வெளி பயன்பாடு மற்றும் பாதுகாப்பு' குறித்த விவாதத்தில் இந்தியக் குழுவினர் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) சுதா மூர்த்தி கூறியதாவது:
"விண்வெளி ஆய்வுகளில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு நாடாகும். எங்களது விண்வெளித் திட்டங்கள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்டவை. விண்வெளி என்பது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கோட்பாட்டையே இந்தியா நம்புகிறது. எனவே, விண்வெளி என்பது நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புக்கான களமாகவே நீடிக்க வேண்டுமே தவிர, அது மோதலுக்கான இடமாக மாறக்கூடாது.
விண்வெளியில் ஆயுதப் போட்டியைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அணுகுமுறைகளில் சர்வதேச அளவில் கருத்து வேறுபாடுகள் தொடர்கின்றன. விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுப்பதற்கு, சட்டப்பூர்வமாகப் பிணைக்கக்கூடியதும், உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதும், சரிபார்க்கக் கூடியதுமான சர்வதேச ஒப்பந்தம் அவசியம் என்பதை ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஒருசில அச்சுறுத்தல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து ஆராயும் அமைப்புகளின் அதிகாரப் பங்கீடுகள் மதிக்கப்பட வேண்டும்.
அதேநேரத்தில், இந்த விவாதங்கள் அல்லது கட்டுப்பாடுகளின் எந்தவொரு முடிவும், அமைதியான மற்றும் சட்டப்பூர்வமான நோக்கங்களுக்காக வளரும் நாடுகள் மேற்கொள்ளும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பரிமாற்றங்களைத் தடுப்பதாக அமைந்துவிடக் கூடாது," என்று அவர் பேசினார்.