அமெரிக்க இடைத்தேர்தல்தான் பங்குச்சந்தை இறக்கத்திற்கு மிக முக்கியக் காரணமா?

இந்தியப் பங்குச்சந்தை மட்டுமல்ல, உலகம் முழுக்கவும் உள்ள பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் கடந்த இரு ஆண்டுகள் பார்த்த லாபம் எல்லாம் கரைந்துபோய், நஷ்டம் அடையும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே உலகம் முழுக்கப் பங்குச்சந்தைகள் கடும் இறக்கம் கண்டிருப்பதற்கு முக்கியமான ஒரு காரணம், அடுத்த மாதம் நவம்பர் 3-ஆம் தேதி நடக்கவிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தல்தான் என்கிறார்கள் நிபுணர்கள்.

அமெரிக்காவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் 49.8% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து அவர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கை காரணமாக உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் ஆட்டம் போடத் தொடங்கின.

இந்த நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் ஆரம்பத்தில் அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக சர்வேகள் சொல்கின்றன. மக்கள் அவரை ஏற்றுக்கொள்வதற்கான விகிதம் 30% என்கிற அளவுக்குக் குறைந்திருப்பதாக இந்த சர்வேகள் சொல்கின்றன.

இரு ஆண்டுகளுக்கு முன் டிரம்பிற்கு ஏகோபித்த ஆதரவு தந்த மக்கள் இப்போது அவரை வெறுக்க என்ன காரணம்? அமெரிக்கா, ஈரான் மீது போர் தொடுத்ததால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளே முக்கியக் காரணம் ஆகும். ஈரான் என்பது சிறிய நாடு. இரண்டு வாரம் ஈரான் மீது குண்டு போட்டால், அதை வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று நினைத்துத்தான் அமெரிக்க போர் தொடுத்தது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் அமெரிக்காவால் ஈரானை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை.

அமெரிக்காவை நேரடியாகத் தாக்க முடியாத நிலையில் இருக்கும் ஈரான், தனக்குப் பக்கத்தில் உள்ள ஹெர்மூஸ் நீர்வழிப் பாதையை அடைத்து வைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பல பகுதிக்குச் செல்ல வேண்டிய கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையக் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த பிப்ரவரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 0.75 டாலர் என்கிற அளவில் இருந்து இப்போது 1.25 டாலர் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் எல்லாப் பொருள்களின் விலையை உயரச் செய்திருக்கிறது.

இதனால் மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்தக் காரணம்தான் டிரம்ப் மீது அமெரிக்க மக்கள் கோபம் கொள்ள தொடங்கி இருக்கின்றனர்.

சர்வதேச சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 113 டாலருக்கு மேல் உள்ளது. அமெரிக்கத் தேர்தல் நடப்பதற்குள் இது 120 டாலர் வரைகூட செல்ல வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் எந்த அளவுக்கு அதிகமாக இருக்குமோ, அந்த அளவுக்கு டிரம்புக்கு அதிக வாக்குகள் கிடைப்பது குறையும் என்பது ஈரானின் கணக்கு.

இந்த இடைத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் அவரது 'பவர்' குறையும். நினைத்ததை எல்லாம் செய்ய முடியாத நிலை வரும். அப்போது ஈரான் மீதான போர் நெருக்கடியும் குறையும். இதனால் கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்து, உலக அளவில் அதன் விலை கணிசமாகக் குறையும். இதன் காரணமாக, பணவீக்கமும் குறைந்து, பங்குச்சந்தை மேலே செல்லத் தொடங்கும் நிலை உருவாகும் என்பதே பங்குச்சந்தை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

எனவே, அமெரிக்கத் தேர்தல் காரணமாக பங்குச்சந்தை இப்போது இறங்கி இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யத் தொடங்கலாம்.

நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு மிகவும் பெஸ்ட்-ஆன நேரம் என்பதை சொல்லவே தேவை இல்லை!

Bootstrap