அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தின் செல்ஃப் டிரைவிங் தொழில்நுட்பத்தில் (தன்னியக்க ஓட்டுநர் முறை) இயங்கும் சிற்றூந்து மோதி 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோகமான விபத்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை தரப்பில் இருந்து கிடைத்த தகவலின்படி, அந்த டெஸ்லா சிற்றூந்து விபத்தின்போது மணிக்குச் சுமார் 112 கிலோமீட்டர் (70 மைல்) வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்போது நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற 71 வயது முதியவர் மீது அதிவேகமாக வந்த சிற்றூந்து மோதியது.
விபத்தின்போது சிற்றூந்தில் இருந்த ஓட்டுநர், அந்த முதியவர் பாதையைக் கடக்க முயல்வதைக் கண்டவுடன் உடனடியாக சிற்றூந்தை திருப்பியும், பிரேக் போட்டும் சிற்றூந்தை நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
இருப்பினும், சிற்றூந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்ததால் விபத்தைத் தவிர்க்க முடியவில்லை என்றும், சிற்றூந்து மோதிய வேகத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செல்ஃப் டிரைவிங் தொழில்நுட்பத்தில் இயங்கும் சிற்றூந்துகள் முழுமையாகப் பாதுகாப்பானதா என்பது குறித்து ஏற்கனவே உலகளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பல நாடுகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன், அது முழுமையான பாதுகாப்புத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று பல பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விபத்து குறித்து டெஸ்லா நிறுவனமும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி எலோன் மஸ்க்கும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விசாரணையின் முடிவுகள், செல்ஃப் டிரைவிங் தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், அதன் மீதான மக்களின் நம்பிக்கைக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.