பிரதமர் ரொப் ஜெட்டன், துணைவர் நிக்கோலஸ் கீனன் தம்பதிக்கு விரைவில் குழந்தை

நெதர்லாந்து பிரதமர் ரொப் ஜெட்டனும், அவரது துணைவரும் ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த கள ஹொக்கி வீரருமான நிக்கோலஸ் கீனனும் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள இருவரும், “மிகவும் சிறப்பான ஒருவர் எங்களை நோக்கி வருகிறார். குட்டியே, 2027ஆம் ஆண்டு சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களது குழந்தை பிறப்பதற்கு உதவிய கருமுட்டை தானம் செய்தவர், வாடகைத் தாயாகச் செயல்படும் லிசா மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இவர்களின் உதவியின்றி இது சாத்தியமாகியிருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் குழந்தைப் பேறு தொடர்பாக ரொப் ஜெட்டனின் கட்சியான D66 வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கெனவே குழந்தைகள் உள்ள தங்களது நண்பர் தம்பதியினரின் உதவியுடன் இந்தக் கர்ப்பம் சாத்தியமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொப் ஜெட்டனும் நிக்கோலஸ் கீனனும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தனர்.

1987ஆம் ஆண்டு நெதர்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள வெகெல் நகரில் பிறந்த ஜெட்டன், அருகிலுள்ள உடென் நகரில் வளர்ந்தார். நைமேகன் முகாமைத்துவக் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், நெதர்லாந்தின் தொடருந்துப் பாதைக் கட்டமைப்பைப் பராமரிக்கும் ProRail நிறுவனத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

2017ஆம் ஆண்டு D66 கட்சியின் சார்பில் அந்தநாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான அவர், பின்னர் முன்னாள் பிரதமர் மார்க் ரூட்டே தலைமையிலான அரசாங்கத்தில் காலநிலை மற்றும் எரிசக்திக் கொள்கைகளுக்கான அமைச்சராகப் பணியாற்றினார். மார்க் ரூட்டே தற்போது நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.

Bootstrap