இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “எனது நண்பரும் இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று, வீரமிக்க இந்திய விமானி ஒருவருடன் இணைந்து தீபம் ஏற்ற அவருக்கு அழைப்பு விடுத்தேன்.''என பதிவிட்டுள்ளார்.
நெதன்யாகுவுடனான உரையாடல் குறித்து இந்திய பிரதமர் மோடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
இந்தியா - இஸ்ரேல் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் உரையாடினோம். மேலும், இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்த எங்கள் உறுதிப்பாட்டையும் தெரிவித்துக் கொண்டோம். மேற்காசிய நிலவரம் குறித்தும் பேசினோம். அமைதி மற்றும் நிலைத் தன்மையை கொண்டுவருவது குறித்து ஆலோசித்தோம்" என்று கூறியுள்ளார்.
மேலும்,இந்த தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா–இஸ்ரேல் இடையிலான உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருவதை இரு தலைவர்களும் வரவேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் அவர்கள் உறுதி தெரிவித்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.