ருமேனியக் கடற்கரைக்கு அப்பால் கருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தித் தாக்குதலில், குறித்த கப்பல் மூழ்கியுள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஒரு மாலுமி உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என ருமேனியா குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கொமொரோஸ் நாட்டின் கொடியுடன் பயணித்த ‘Khoryv’ என்ற சரக்குக் கப்பலே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கப்பலில் உக்ரைன் மற்றும் அசர்பைஜான் நாடுகளைச் சேர்ந்த 13 மாலுமிகள் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியிலிருந்து புறப்பட்டு, டானியூப் நதி கருங்கடலுடன் இணையும் ருமேனியாவின் சுலினா துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, கொன்ஸ்டன்டா துறைமுகத்திலிருந்து சுமார் 24 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலிலிருந்து அவசர உதவிச் சமிக்ஞை அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, ருமேனிய அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதன்போது, ஒன்பது மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும், சீரற்ற காலநிலை மற்றும் குறைந்த பார்வைத்திறன் காரணமாக வான்வழித் தேடுதல் நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன