அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சுமார் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், கனடாவின் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத இறக்குமதி வரியைத் தளர்த்த ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் அறிவிப்பின்படி, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஒட்டு மரப்பலகைகள், காகிதப் பொருட்கள், சில வகை இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி வரிகள் குறைக்கப்படவுள்ளன.
அமெரிக்காவின் மைனே மாநிலத்தில் நடைபெறவுள்ள கடுமையான போட்டி நிறைந்த செனட் தேர்தலில் மீண்டும் வெற்றிபெறப் போட்டியிடும் குடியரசுக் கட்சி செனட்டர் சூசன் கொலின்ஸ், தாம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனது மாநிலத்தின் விவசாயத் துறைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனேடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருந்தது.
இதற்குப் பதிலடியாக, கனேடியப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கமும் அமெரிக்கப் பொருட்கள் மீது பதில் வரிகளை விதித்தது.
இந்தநிலையில், அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் காங்கிரஸின் கட்டுப்பாடு குடியரசுக் கட்சியிடமா அல்லது ஜனநாயகக் கட்சியிடமா என்பது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அடுத்த இரண்டு ஆண்டுகால ஆட்சியின் கொள்கைத் தீர்மானங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
இதனால், கனேடிய பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்கும் தீர்மானம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில், கனடாவின் உரிமைகளைப் பாதுகாக்கும் வர்த்தக உறவை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தமது நாடு தயாராக இருப்பதாக கனடாவின் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் தெரிவித்துள்ளார்.