யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையில், ‘பெரும் புதைகுழி’ என்ற சொல்லைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குழுவொன்று, இது தொடர்பாக நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்னர் சமர்ப்பித்த அறிக்கைகளில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய இடைக்கால அறிக்கையில் அது நீக்கப்பட்டுள்ளமை திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் எனச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செம்மணி புதைகுழிப் பகுதியைப் புதைகுழியாகக் கருதுவதற்கான அடிப்படை இருந்தால், அதனை உறுதிப்படுத்தும் மனித எச்சங்களின் பதிவுகள், நிலப் பயன்பாட்டின் வரலாறு மற்றும் சட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட நம்பகமான ஆதாரங்களை அறிக்கையில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மனித எச்சங்களின் ஆழம், பரவல், மண் அடுக்குகளில் அவற்றின் அமைவிடம் மற்றும் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவை வழக்கமான அடக்க முறைகளுடன் பொருந்துகின்றனவா என்பதை அறிவியல் ரீதியாக விளக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.