பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையே உள்ள முக்கிய எல்லை மூடப்பட்டதன் காரணமாக, அங்கு சமையல் எரிவாயு (LPG) கொள்கலன்களின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் எல்லையில் ஏற்பட்ட தடையால், நாளொன்றுக்கு சுமார் 7,000 மெட்ரிக் டொன் வரை பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எரிவாயு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை 4,500 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்கப்பட்ட 12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலன், தற்போது கடுமையாக அதிகரித்து 7,000 முதல் 8,200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
எல்லைப் பகுதியில் எரிவாயு ஏற்றிச் செல்லும் பாரவூர்தி உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தொடர்ந்து ஸ்தம்பித்து நிற்கின்றன.
குளிர்காலம் நெருங்கும் வேளையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு பொதுமக்களைக் கடும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதற்கும் காரணமாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.