இளவரசர் வில்லியம், தான் கிறிஸ்டோபர் நோலனின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார்.
இளவரசர் வில்லியம் சமீபத்தில், தி கிரஹாம் நோர்ட்டன் ஷோ என்னும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது அவர், தனக்கு யாருடைய திரைப்படங்கள், எந்தெந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிடிக்கும் என்பது குறித்து பகிர்ந்துகொண்டார்.
ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் படங்களில் மூழ்கிப் போவது எனக்கு மிகவும் பிடிக்கும், எனக்கு ஆக்ஷன் படங்களும் பிடிக்கும், என்றாலும், நான் சற்று வித்தியாசமான ஒன்றை விரும்புவேன் என்று கூறினார் வில்லியம்.
அதாவது, கிறிஸ்டோபர் நோலன் செய்யும் எல்லாவற்றிற்கும் நான் ஒரு தீவிர ரசிகன். அவருடைய படங்கள் அருமையானவை, தி டார்க் நைட் வரிசையில் வெளியான திரைப்படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் வில்லியம்.
அத்துடன், முற்றிலும் சாத்தியமில்லாத கருத்துக்களை எடுத்துக்கொண்டு, அவற்றை அவர் நம்பமுடியாத அளவிற்கு பொழுதுபோக்கு அம்சமுள்ளதாக மாற்றிவிடுகிறார் என்றும் நோலனை புகழ்ந்துள்ளார் வில்லியம்.
அதுபோக, தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ் என்னும் தொலைக்காட்சித் தொடர் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தன் குடும்பத்தினருக்கும் அது மிகவும் பிடிக்கும் என்றும் கூறிய வில்லியம், சார்லட்டும் லூயிஸும் அதற்கு அடிமையாகிவிட்டார்கள். அது உண்மையிலேயே ஒரு நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.