பூலோ என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று பிரித்தானியாவை நெருங்கும் நிலையில், அது தொடர்பில் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவை பூலோ (Storm Boelo) என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று நெருங்கும் நிலையில், வார இறுதியில் நாடு, மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமுடைய காற்றை எதிர்கொள்ளக்கூடும் என்றும், பெருவெள்ளம், மின்தடை மற்றும் சாலைப்போக்குவரத்து பாதிப்பு முதலான இடையூறுகளை மக்கள் எதிர்கொள்ளக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்கொட்லாந்து, வட இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்தின் சில பகுதிகள் என மொத்தம் 42 இடங்களுக்கு காற்று தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் போக்குவரத்து ரத்து, கட்டிடங்களுக்கு சேதம் மற்றும் மின் தடைகளை எதிர்கொள்ளலாம் என்றும், பேரலைகள் மற்றும் பலத்த காற்று காரணமாக பொருட்கள் பறப்பதால் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
ஆகவே, மக்கள், டார்ச், பேட்டரிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஸ்கொட்லாந்தைப் பொருத்தவரை, ஐந்து இடங்களுக்கு மழை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பூலோ புயல் காரணமாக சில இடங்களில் 25 முதல் 30 மில்லிமீற்றர் மழையும், சில இடங்களில் 50 முதல் 60 மில்லிமீற்றர் மழையும் பெய்யக்கூடும் என்றும், அதனால் பெருவெள்ள அபாயம் உள்ளதாகவும் வானிலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.