அமெரிக்கர்களுக்கு எதிரான ஈரானின் சதித்திட்டம் மேம்பட்ட நிலைகளை எட்டியுள்ளது.
ஈரான், மத்திய கிழக்கு மற்றும் பிற பகுதிகளில் உள்ள அமெரிக்கர்களைக் குறிவைப்பதற்கான தனது முயற்சிகளை கணிசமாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க தேசிய உளவுத்துறைத் தலைவர் ஜே கிளேட்டன் எச்சரித்துள்ளார்.
ஏமனின் ஹவுதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அத்தியாவசியமற்ற அமெரிக்கத் தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுமாறு இந்த வாரம் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம், ஹவுதிகளிடமிருந்து சவுதி அரேபியா கிட்டத்தட்ட தினமும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது; இதில் ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அடங்கும், இது கடந்த பல ஆண்டுகளில் சவுதி அரேபியாவில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதலாகும்.
இந்த நிலையில், ஈரான் அமெரிக்கப் பணியாளர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக, வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு அனுப்பிய குறிப்பாணையில் கிளேட்டன் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானியர்கள் அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் உயிருக்கு ஆபத்தான சதி முயற்சிகள், மத்திய கிழக்கு மற்றும் வேறு சில நாடுகளில் மேம்பட்ட கட்டத்தை எட்டியுள்ளன என்று அந்த குறிப்பாணை தெரிவிக்கிறது.
ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்குவதற்கு முன்னதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய தாக்குதல் நடவடிக்கைகளை ரத்து செய்வதற்கு முன்பாக ஜூலை மாதத்திலும், அவசியமற்ற பணியாளர்களை வளைகுடாப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், தூதரகங்களில் எங்களது பணியாளர் எண்ணிக்கை குறித்து முடிவெடுக்கும்போது, பாதுகாப்புச் சூழல் குறித்த புதிய தகவல்களை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறோம் என்றார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தனது முழு கோபத்தையும் வெளிப்படுத்தக்கூடும் என்று ட்ரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பிப்ரவரி மாத இறுதியில் இஸ்ரேலின் அழுத்தங்களை அடுத்து ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் இந்த மோதல் தொடங்கியது.
இதில் அந்நாட்டின் உயர் தலைவர் மற்றும் மூத்த இராணுவத் தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், அமெரிக்காவில் ஈரானுக்கு எதிரான இந்தப் போர் தொடர்பில் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகு இதை தமது தேர்தல் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்.