சீனாவில் அமெரிக்கா மேற்கொள்ளும் முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் தீர்மானத்தை உடனடியாக நிறுத்துமாறு சீன வர்த்தக அமைச்சு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உணர்திறன்மிக்க தொழில்நுட்பத் துறைகளைக் இலக்குவைத்து முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க திறைசேரி திணைக்களத்தினால் (US Treasury Department) வெளிநாட்டு முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தை புதுப்பிப்பதற்கான யோசனைத் தொடர் அண்மையில் வெளியிடப்பட்டது.
அந்த புதிய யோசனைகளின்படி, முதலீட்டுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட துறைகளுக்குள் உயிரி தொழில்நுட்பவியல் (biotechnology) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதுடன், உயர் செயல்திறன் கணினியியல் (high-performance computing) மற்றும் அதிவேக அமைப்புகள் (hypersonic systems) ஆகிய துறைகளும் உள்ளடங்கும் வகையில் அந்தக் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்னரும் அரைக்கடத்திகள் (semiconductors), குவாண்டம் தொழில்நுட்பம் (quantum technologies) மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஆகிய துறைகளில் சீனாவுடனான அமெரிக்க முதலீடுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த யோசனை மூலம் சீனா தொடர்பான முதலீட்டுக் கட்டுப்பாடுகள் பாரபட்சமான முறையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தடைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெய்ஜிங்கிலுள்ள வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள சீனா, இதற்கு எதிராக குறிப்பிடப்படாத தகுந்த பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை தன்வசம் வைத்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த யோசனைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகள் பாதிக்கப்படுவதுடன், கடந்த ஆறு மாதங்களில் இருமுறை சந்தித்த இரு நாட்டு ஜனாதிபதிகளும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு இது முரணானது என்றும் சீனத் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
எனினும், அமெரிக்க திறைசேரி திணைக்களம் தெரிவிக்கையில், இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய இரட்டைப் பயன்பாட்டு மூலோபாய தொழில்நுட்பங்களை (dual-use strategic technologies) வெளிநாட்டுப் போட்டியாளர்கள் உருவாக்குவதற்கு அமெரிக்க மூலதனம் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.