ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையிலும், சவூதி அரேபியா தனது பிரதான சர்வதேச வானூர்தி நிலையத்தின் சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
ஹூதி படையினர் நடத்திய தாக்குதலில் சேதமடைந்து முடங்கியிருந்த 'மன்னர் காலித் சர்வதேச வானூர்தி நிலையத்தின்' (King Khalid International Airport) 1 மற்றும் 2 ஆம் முனையங்கள் (Terminals 1 & 2) இன்று முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச வானூர்திப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் இந்த வானூர்தி நிலையத்தில் வரையறுக்கப்பட்ட அளவில் உள்நாட்டு வானூர்திகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
அதேவேளை, சவூதி தலைநகரை இலக்கு வைத்து ஹூதி அமைப்பினர் ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வானூர்தி நிலையம் இன்னமும் "பாதுகாப்பற்றது" என்று ஹூதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சாரி (Yahya Saree) எச்சரித்துள்ளார்.
ரியாத் வானூர்தி நிலையம் பாதுகாப்பற்றது என்றும், அது தங்களது படைகளின் ராணுவ இலக்காகச் செயல்படுவதால் சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு வானூர்தி நிறுவனங்கள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.