'அர்னாப் புயல்' தீவிரமடைந்தது – கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘அர்னாப்’ (ARNAB) புயலாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் மேற்கு திசையிலும் பின்னர் வடமேற்கு திசையிலும் நகர்ந்து, இன்று (26) இரவு சுமார் 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, புயல் காரணமாகக் கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று முற்பகல் 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி, வட அட்சரேகை 10 முதல் 20 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 95 வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

Bootstrap