இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான நேரடி விமானச் சேவையை 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ள பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம், கொழும்புக்கான தனது விமானச் சேவையை மீள ஆரம்பித்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த முதலாவது விமானத்துக்கு பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்புக்கும் லண்டன் கெட்விக் விமான நிலையத்துக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ள இச்சேவை, குளிர்காலம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது. போயிங் 777 ரக விமானங்கள் மூலம் இயக்கப்படும் இச்சேவையில், வணிக வகுப்பு, பிரீமியம் எகானமி மற்றும் எகானமி ஆகிய மூன்று பயண வகுப்புகள் உள்ளடங்குகின்றன.
புதிய சேவையின் ஆரம்பத்தைக் கொண்டாடும் வகையில், எகானமி வகுப்பில் 255,000 ரூபா முதல் ஆரம்பிக்கும் தள்ளுபடி இருவழிப் பயணக் கட்டணங்களையும் பிரிட்டிஷ் எயார்வேஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.