ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகியவை எண்ணெய் பனைச் செய்கையைத் திட்டமிட்டு விரிவுபடுத்தி பொருளாதார நன்மைகளைப் பெற்றுள்ள நிலையில், இலங்கை இத்துறையில் கொள்கைத் தயக்கம் காரணமாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஓர் ஆய்வுப் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
மலேசியா 1960களில் ரப்பர் உற்பத்தியில் கொண்டிருந்த அதிகப்படியான தங்கியிருப்பைக் குறைக்கும் நோக்கில் எண்ணெய் பனைச் செய்கையை ஊக்குவித்தது. அரசாங்கத்தின் ஆதரவுடன் நிலம், கன்றுகள், சந்தை வசதிகள் மற்றும் பதப்படுத்தும் ஆலைகள் வழங்கப்பட்டதால், அந்நாட்டின் எண்ணெய் பனைச் செய்கைப் பரப்பு சுமார் 55,000 ஹெக்டேயரிலிருந்து 5.74 மில்லியன் ஹெக்டேயர் வரை விரிவடைந்தது.
அதேவேளை, இந்தோனேசியா கிராமப்புற அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட முதலீடுகளுடன் எண்ணெய் பனைச் செய்கையை ஒருங்கிணைத்தது. இதன் விளைவாக, 1990ஆம் ஆண்டில் சுமார் 1.1 மில்லியன் ஹெக்டேயராக இருந்த செய்கைப் பரப்பு, 2021ஆம் ஆண்டளவில் 15 மில்லியன் ஹெக்டேயருக்கும் அதிகமாக அதிகரித்தது.
இந்தியாவும் சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், தேசிய சமையல் எண்ணெய் – எண்ணெய் பனை இயக்கத்தின் (NMEO-OP) ஊடாக உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 2026 மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 640,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் எண்ணெய் பனை பயிரிடப்பட்டுள்ளதாகவும், சுமார் 2.01 மில்லியன் தொன் கச்சா பாம் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
இலங்கையில் வர்த்தக ரீதியிலான எண்ணெய் பனைச் செய்கை 1968ஆம் ஆண்டு காலி, நாக்கியாதெனிய தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வயது முதிர்ந்த ரப்பர் தோட்டங்களுக்கு மாற்றுப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணெய் பனை, நாட்டின் ஈரவலய காலநிலைக்கு ஏற்ற பயிராகக் கருதப்பட்டது. நாக்கியாதெனிய தோட்டம் 2020ஆம் ஆண்டு நிலையான எண்ணெய் பனைக்கான சர்வதேச அமைப்பின் (RSPO) சான்றிதழைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், 2016ஆம் ஆண்டு எண்ணெய் பனைச் செய்கையை 20,000 ஹெக்டேயர் வரை விரிவுபடுத்த அனுமதி வழங்கப்பட்டபோதிலும், அது பெருந்தோட்ட நிறுவனங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாகப் பகுப்பாய்வு குறிப்பிடுகிறது. சிறு விவசாயிகளை உள்ளடக்கிய முறையான உற்பத்தி மாதிரியொன்றை இலங்கை உருவாக்கத் தவறியதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு அரசாங்கம் எண்ணெய் பனைச் செய்கைக்குத் தடை விதித்ததுடன், ஏற்கனவே உள்ள பயிர்ச்செய்கைகளையும் படிப்படியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அறிவித்தது.
இந்நிலையில், எண்ணெய் பனைச் செய்கையின் எதிர்காலம் தொடர்பான கொள்கைகள் உள்ளூர் அறிவியல் ஆய்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் எனப் பகுப்பாய்வு வலியுறுத்துகிறது.
மேலும், தடையை நீக்குவது தொடர்பில் நிபுணர் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படும் நிலையில், சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எண்ணெய் பனைச் செய்கையை மீண்டும் பரிசீலிப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலேசியா, இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் அனுபவங்கள், நீண்டகாலத் திட்டமிடல், நிலையான அரச கொள்கை மற்றும் அறிவியல் அடிப்படையிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் விவசாய வாய்ப்புகளைப் பொருளாதார நன்மைகளாக மாற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதாக இந்தப் பகுப்பாய்வு முடிவுசெய்கிறது.