கோஸ்டா ரிக்காவின் தலைநகர் சேன் ஹோசே நகருக்கு வெளியே நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாரிய சிறைச்சாலையில், முதல் கட்டமாக 123 கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நீதித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சிறைச்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கு எல் செல்வடோர் அரசாங்கமும் உதவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீதித்துறை அமைச்சு வெளியிட்டுள்ள புகைப்படங்களில், தலையை மொட்டையடித்து, செம்மஞ்சள் நிறச் சீருடை அணிந்த கைதிகள் வரிசையாக அமர்ந்திருப்பது காணப்படுகிறது.
இந்தக் காட்சிகள், எல் செல்வடோர் ஜனாதிபதி நயீப் புகேலே தலைமையிலான அரசாங்கத்தினால் குழு உறுப்பினர்களையும் சந்தேகநபர்களையும் தடுத்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் CECOT சிறைச்சாலையின் புகைப்படங்களை ஒத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கோஸ்டா ரிக்கா அரசாங்கம், இந்த அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கான உயர் பாதுகாப்புத் தடுப்பு மையம் (CACCO) எனப் பெயரிட்டுள்ளது.
ஜனாதிபதி லோரா பெர்னாண்டஸ் தலைமையிலான அரசாங்கம், நாட்டில் நிலவும் பாதுகாப்பு நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான கடுமையான குற்றத் தடுப்புக் கொள்கையின் அடையாளமாக இந்தச் சிறைச்சாலையை அறிமுகப்படுத்தியுள்ளது.
”கோஸ்டா ரிக்கா தனது சிறைச்சாலை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறது” என அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கேப்ரியல் அகிலர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான வலுவான நடவடிக்கையாக இந்த மையம் அமையும் என்றும், சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
5,100 கைதிகளைத் தடுத்து வைக்கும் திறன் கொண்ட இந்தச் சிறைச்சாலை, கோஸ்டா ரிக்காவின் மொத்த சிறைக்கைதிகள் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதத்தினருக்கு இடமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.