ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த மூன்று எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கியதால் தீப்பிடித்ததாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை தெரிவித்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தக் கப்பல்கள் "அங்கீகரிக்கப்படாத" தெற்குப் பாதையைப் பயன்படுத்திக்கொண்டிருந்ததாகவும், தீப்பிடித்த பிறகு ஹோர்முஸ் நீரிணையின் தெற்குக் கரையில் கைவிடப்பட்டதாகவும் IRGC கடற்படை கூறியுள்ளது.
அந்த எண்ணெய்க் கப்பல்கள் தங்களின் அனைத்து ரேடார் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளையும் அணைத்துவிட்டு, IRGC கடற்படையின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்து, ஹோர்முஸ் நீரிணையின் அங்கீகரிக்கப்படாத தெற்குப் பாதையை விட்டு வெளியேற முயன்றன என்று ஈரானின் தஸ்னிம் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பல்கள் தீப்பிடித்ததால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறிப்பிட்ட IRGC கடற்படை, "ஹோர்முஸ் நீரிணையில் உள்ள அங்கீகரிக்கப்படாத பாதை மாசுபட்டுள்ளது, மேலும் இந்தப் பாதைகள் வழியாகச் செல்வதற்கு கப்பல்களின் உரிமையாளர்களும் பணியாளர்களுமே பொறுப்பு" என்று கூறியுள்ளது.
"இணையவெளியில் CENTCOM-இன் (அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு) மாயைகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம்" என கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு IRGC எச்சரிக்கை விடுத்ததோடு, எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையும் தீர்மானமாகக் கையாளப்படும் என்றும் கூறியுள்ளது.