வடமேற்கு பூட்டானின் காசா மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள 'ஷிண்டபு' எனும் அபாயகரமான பனி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்தியாவின் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் எல்லைப்புற மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூட்டானில் உள்ள 17 ஆபத்தான பனி ஏரிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஷிண்டபு பனி ஏரியின் ஒரு பகுதி உருகி, நேற்று மாலை நீர் அதிவேகமாக பீறிட்டு வெளியேறியுள்ளது.
இவ்வாறு மோ சூ நதி வழியாகப் பாய்ந்த வெள்ள நீரினால் காசா சாச்சு பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இருப்பினும், வெள்ளத்தின் காரணமாக அப்பகுதியிலிருந்த சூரிய சக்தியால் இயங்கும் நீர்ப்பாசன அமைப்பு சேதமடைந்துள்ளதுடன், புனாகா - காசா சாலையில் கழிவுகள் அடித்து வரப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பூட்டானின் புனாகா நகரத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீகாங் பகுதியை வெள்ள நீர் சென்றடைந்துள்ளது.
இந்த நீரானது வடக்கு பூட்டானில் தோன்றி, இந்தியாவின் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து பிரம்மபுத்திராவுடன் கலக்கும் சங்கோஷ் நதியை வந்தடையவுள்ளது.
இதன் காரணமாகச் சங்கோஷ் நதியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து பேரழிவு ஏற்படக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை பூட்டான் அதிகாரிகள் இந்தியாவிற்கு விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதிகள், அலிபுர்துவார், ஜல்பாய்குரி மற்றும் அசாமின் துப்ரி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அங்குள்ள அதிகாரிகளால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆற்றங்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அசாமிலும் நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.