எய்ட்ஸுக்காக 191 நாடுகளை சைக்கிளில் சுற்றி வந்த இளைஞர்

எய்ட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தி 2004ஆம் ஆண்டு முதல் மிதிவண்டி மூலம் உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோமன் தேப்நாத், தற்போது இந்தியாவிற்குள் 'புனர் மிலன் பாரத்' எனும் பெயரில் புதிய மிதிவண்டிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் தெற்கு பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2004ஆம் ஆண்டு மே 27ஆம் திகதி தனது உலகப் பயணத்தைத் தொடங்கினார்.

சர்வதேச பயணத்திற்கு முன்னதாக, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களுக்கும் இவர் பயணம் செய்திருந்தார்.

டெல்லிக்குச் சென்ற போது, அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இச்சந்திப்புகளின் மூலம் 5 நாடுகளுக்கான சர்வதேச விசாவும் 50,000 ரூபாய் நிதியுதவியும் இவருக்குக் கிடைத்தன.

2004 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் நேபாளம், திபெத், சீனா, பூட்டான், பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும்; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ஈரான், துருக்கி, ஜோர்ஜியா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கும் இவர் பயணித்தார்.

தொடர்ந்து 2009 முதல் 2012 வரை 48 ஐரோப்பிய நாடுகள், 54 ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கின் 10 நாடுகளுக்குப் பயணம் செய்தார். 2015 முதல் 2017 வரை தென் அமெரிக்காவின் 13 நாடுகளிலும், 2018இல் கரீபியன் தீவுகள் மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிலும் மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டார்.

2019-20 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் 48 மாகாணங்கள் மற்றும் கனடாவிற்குப் பயணித்த இவர், ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் சென்றிருந்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவில் சிக்கிக்கொண்ட இவர், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னரே அங்கிருந்து வெளியேறினார்.

அதன்பின் தென் கொரியா மற்றும் நியூசிலாந்திற்குச் சென்று, நியூசிலாந்தில் சுமார் ஒரு வருடம் தங்கியிருந்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வழியாக இந்தியாவை வந்தடைந்தார்.

சுவாமி விவேகானந்தரின் போதனைகள் மற்றும் பிமல் முகர்ஜி எழுதிய 'தோ சக்கா துனியா' (இரு சக்கரங்களில் உலகம்) என்ற புத்தகத்தின் உத்வேகத்தால், தனது பயணம் முழுவதிலும் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரசாரத்தை இவர் முன்னெடுத்தார்.

தற்போது இந்தியாவிற்குள் தனது கவனத்தைச் செலுத்தியுள்ள சோமன், 'புனர் மிலன் பாரத்' (இந்தியாவை மீண்டும் ஒன்றிணைத்தல்) எனும் நாடு தழுவிய மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

Bootstrap