உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமான Binance, தனது பாதுகாப்புக் கட்டமைப்பில் சைபர் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான டிஜிட்டல் சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் உலகளாவிய கிரிப்டோகரன்சி வரலாற்றில் இடம்பெறும் மிகப்பெரிய திருட்டுச் சம்பவமாக அமையக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (29) அடையாளம் காணப்பட்ட பாதுகாப்புக் குறைபாடு தொடர்பில் Binance நிறுவனம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சைபர் தாக்குதலால் ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என Binance நிறுவனத்தின் இணை நிறுவனர் யி ஹே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாங்பெங் சாவோவும், தனது X சமூக வலைத்தளப் பதிவில் இந்தச் சம்பவம் சைபர் தாக்குதலாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சைபர் தாக்குதல் இடம்பெற்றமை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சொத்துக்களின் துல்லியமான பெறுமதியும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட டிஜிட்டல் சொத்துக்களை முடக்குவதற்கு உலகின் முன்னணி ஸ்டேபிள்கொயின் நிறுவனங்களான Tether மற்றும் Circle ஆகியவையும் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, Tether நிறுவனம் சுமார் 1.57 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களையும், Circle நிறுவனம் 800 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களையும் முடக்கியுள்ளன.
அத்துடன், Ripple நிறுவனமும் சுமார் 200 மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை முடக்கியுள்ளதாக Binance அறிவித்துள்ளது.