நச்சுக் காளான் உணவு கொடுத்து மூவரின் உயிரைப் பறித்த மருமகளுக்கு நீதிமன்றத்தின் தண்டனை!

அவுஸ்திரேலியாவில் நச்சுக் காளான்களை உணவில் கலந்து மூவரின் உயிரைப் பறித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற எரின் பாட்டர்சன் என்பவருக்கு, ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய வகையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

52 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான எரின் பாட்டர்சன், 2023 ஜூலை மாதம் குடும்பத்தினருக்கு வழங்கிய மதிய உணவில், உயிருக்கு ஆபத்தான ‘டெத் கெப்’ (Death Cap) நச்சுக் காளான்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பீஃப் வெலிங்டன் உணவைப் பரிமாறியுள்ளார்.

இந்த உணவை உட்கொண்ட அவரது பிரிந்து வாழும் கணவரின் பெற்றோர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

மேலும், உணவை உட்கொண்ட மதபோதகர் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, பல வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உயிர் பிழைத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் மூவரின் உயிரைப் பறித்த குற்றச்சாட்டில் எரின் பாட்டர்சன் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

இதையடுத்து, மூவரின் உயிரைப் பறித்தமைக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், உயிரைப் பறிக்க முயற்சித்தமைக்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.

முன்னதாக வழங்கப்பட்ட தண்டனையின்படி, 33 ஆண்டுகளுக்குப் பின்னர் பிணையில் செல்ல அவருக்கு வாய்ப்பு இருந்தது.

ஆனால், இந்தத் தண்டனை குற்றத்தின் தீவிரத்துக்குப் போதுமானதல்ல எனத் தெரிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், அவருக்கு ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய வகையில் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மிகவும் திட்டமிட்டு, இரக்கமின்றி மேற்கொள்ளப்பட்ட தீவிரமான குற்றங்கள் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

குற்றத்தைச் செய்வதற்காக அவர் சிக்கலான ஏமாற்று நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தண்டனையை ரத்து செய்து மீண்டும் வழக்கு விசாரணை நடத்துமாறு எரின் பாட்டர்சனின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்த நச்சுக் காளான் வழக்கில், எரின் பாட்டர்சன் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Bootstrap