உணவு சாப்பிடுவதை நேரலை செய்த பிரபலம்: QR Code மூலம் 11 லட்சத்திற்கு உணவு ஆர்டர் செய்த நபர்கள்

உணவு சாப்பிடுவதை இணையதள பிரபலம் ஒருவர் ஸ்ட்ரீம் செய்த போது அதில் தெரிந்த கியூ.ஆர் கோடு மூலம் நெட்டிசன்கள் பலர் 11 லட்சம் மதிப்பிலான உணவை ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த லேசி என்ற இணையதள பிரபலம் ட்விட்ச் என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளத்தில் தன்னுடைய அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த லேசி, உணவகம் ஒன்றில் சாப்பிடுவதை ட்விட்ச் இணையதளத்தில் நேரலையில் ஸ்ட்ரீமிங் செய்துள்ளார்.

அப்போது அந்த வீடியோவில் தெரிந்த ஹோட்டலின் கியூ.ஆர் கோடு மூலமாக லேசியின் பின் தொடர்பாளர்கள் பலர் சுமார் 11 லட்சத்திற்கு உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர்.

ஆனால் இது தெரியாமல் லேசி உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த போது, அங்கு வந்த ஹோட்டலின் வெயிட்டர் ஒருவர் ரூபாய் 2 லட்சத்திற்கான பில் ஒன்றை வழங்கியுள்ளார்.

அவரை தொடர்ந்து வந்த மற்றொரு வெய்ட்டர் லேசியிடம் மேலும் பல பில்களை காட்டியுள்ளார். அப்போது தான் தான் செய்த தவறு லேசிக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அதே வீடியோவில் தன்னுடைய பயனர்களை ஏன் இவ்வாறு செய்தீர்கள் என லேசி கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

மேலும் உங்களின் இந்த குறும்புத்தனமான காரியத்தினால் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாகிவிட்டதாக தன்னுடைய பின் தொடர்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இறுதியில் ஹோட்டல் உரிமையாளரிடம், ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான பில்லை தான் முழுவதுமாக செலுத்துவதாக தெரிவித்த லேசி, அந்த உணவுகளை ஹோட்டலுக்கு உணவு சாப்பிட வரும் ஏழ்மையான குடும்பத்தினருக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

இணையதள பிரபலமான லேசியின் கணக்கை சுமார் 40 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Bootstrap